Friday, June 10, 2022
பட்டப் பெயர்
பட்டப் பெயர்;
இதற்குப் பின்னால் ஒரு கிண்டலோ ஒரு பரிகாசமோதான் இருக்கும்.
“ஏ! சுனாமி ! அந்த கம்பியை எடுத்துப்போடு! “
“தோ! வரேன்! “
“ஏ! சுனாமி வண்டியை ஓரமா வுடு! அந்த சன் ஷேட் ச்போர்ட்ட மாத்து!”
பட்டப் பெயருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும
நக்கல் என்னவாக இருக்கும்? வாயிலிருந்து ஜோள்ளு அதிகமா வழியுமோ?
தோட்டத்துப் பக்கம் போனேன்!
“என்னப்பா! சுனாமி , நல்ல பேரா இருக்கே! “
“இல்ல சார்! இந்த கொத்தனார் சுனாமில மாட்டி பொழச்சிட்டார்! அதனாலதான் இவர் பேர் சுனாமி! உண்மையான பேர் ஜெய்சங்கர்!”
“அப்படியா! பெரிய விஷயம் தான்! “
எந்த ஊர்ப்பா! “
“விசூர், முத்தாண்டிகுப்பம் தாண்டினா வரும்”
“அங்க எங்கப்பா கடல் இருக்கு?”
“ இல்லங்க! வேளாங்கண்ணி போனோம். அங்கதான் இப்படி”
“இவர் குடும்பம் போயிடுச்சி! இவர் மட்டும் தண்ணி திரும்ப கடலுக்கு போவையில ஒரு கிணத்துல இவரை இழத்துப் போட்டுடுச்சி! “
“குடும்பம்னா?”
“பெஞ்சாதி, பொண்ணு ரெண்டு பேரும். “
அட டா! என்ன கொடுமை! ஒரு பட்டப் பெயருக்குப் பின்னால் இவ்வளவு சோகமா! சோகத்தை மறக்க முடியாமல் அதையேநினைவு படுத்துவதாய் பேரும் வந்து விட்டது என்ன ஒரு பரிதாபம்!
நான் தோட்டத்தை பெருக்கலானேன்.
“ஏய்! கலவையை ரெடி பண்ணிட்டு சொல்லு! “
சுனாமி வந்தான்!
“சார்! கிணத்துலேந்து வெளில வந்து இடுப்பு மட்டும் தண்ணில் தேடினேன்! எம் பொண்டாட்டி, புள்ள , பொண்ணு மூணும் இருந்த இடம் தெரில. என்னால நடக்க முடில. போட்டு உடஞ்சி கால்ல குத்தி கால் வீங்கிடிச்சி. இருந்த கொஞ்ச நேரத்துல 10000 பாடியை கொண்டு போட்டாங்க. என் சொந்தக்காரன் பயர் சர்வீஸ்ல அங்க தான் இருக்கான். அவன் ஒரு பாடியைப் போட்டுட்டு போனான். நான் அவனை கூப்பிட்டேன். என்னை அடையாளம் தெரில . என் பேன்டெல்லாம் கிழிஞ்சி இருந்தது. அதனாலதானோ என்ன தெரில போல. போய்ட்டான்.
6 லட்சம் வந்துது. என் தம்பி கிட்ட கொடுத்தேன். பின்னாடி என்கிட்ட கொடுக்கவே இல்லேன்னுட்டான். கைஎடுத்து கும்புடு போட்டுட்டு வந்துட்டேன். அந்த காசுல நிலம் வாங்கியிருந்தா இப்ப கோடீஸ்வரனா இருந்திருப்பேன்.
பின்ன என் மச்சினியை கல்யாணம் பண்ணிட்டேன். ஒரு பொண்ணு, ஒரு பையன. பையன் பத்தாவது. இப்ப ஒரு ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுட்டேன். அந்த கடவுள் தான் என்ன காப்பாத்தறாரு!”
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment